"அன்பே சிவம்' என்பது ஆன்றோர் வாக்கு. "அரைப்பவன் அரைத்தால் அடுப்புச் சாம்பலும் மருந்தாகும்' என்பதைப்போல, கல்மனதுக்காரர்களையும் திருத்தி நல்வழியில் அரவணைத்துச் செல்வது அன்பென்னும் ஆயுதமே!
அன்பின்மூலம் அன்பு வளர்வதைப்போல, வெறுப்பின்மூலம் வளர்வதில்லை. வெறுப்பு ஒரு சிறிய கூட்டுக்குள் சதிராடுகிறது. அன்போ வானையும் கடலையும்போல அறிவை விரியச் செய்கிறது. நிலத்தைப் பங்கு போடுவதைப்போல வானத்தை பங்குபோட முடிவதில்லை.
பதினெண் கீழ்க்கணக்கு நூலான "ஐந்திணை ஐம்பதில்'
அன்பு பற்றி ஒரு அருமையான பாடல் உண்டு. அதன் விளக்கம்:
ஒரு காட்டில் இரு மான்கள் இருந்தன. அவை தாகத்தால் வாடின. ஒன்றையொன்று தேற்றியபடி நீர்நிலையை அடைந்தன. அது வறண்டு போய், ஒரு மான்மட்டும் குடிக்குமளவுக்கே சிறிது நீர் இருந்தது. அதைப் பெண்மான் குடிக்கட்டுமென ஆண்மான் காத்திருந்தது. ஆண்மான் குடிக்கட்டுமென பெண்மான் நினைத்தது. கடைசியாக இரண்டும் ஒரே நேரத்தில் வாய்வைத்தன.
நேரம் கடந்ததே தவிர தண்ணீர் குறைய வில்லை. காரணம் தன் இணை நீர் பருகட்டு மென்று அவை நீர் குடிப்பதுபோல் பாசாங்கு செய்தன. தான் நாவறட்சியால் உயிர் விட்டாலும் பரவாயில்லை; தன் இணையின் தாகம் தீரவேண்டுமென்ற நேசத்தில் ஒன்றையொன்று விஞ்சின. அந்த அன்பின் ஆழத்திற்கு சாட்சியாக மழை பொழிந்தது. மான்களின் தாகம் தணிந்ததுடன் நேசத்தின் தாகமும் தணிந்தது. இதைத்தான் "அன்பின் வழியதுயிர்நிலை' என்கிறார் வள்ளுவர். இப்படி அன்பான இருமனம் இணையும் திருமணம் மனித வாழ்வில் மகத்தான வரம். அத்தகைய திருமணத்தில் நீடித்த மாங்கல்ய வரம் பெற்றிருக்கவேண்டும். அப்படி என்றால் என்ன?
திருமணமான பெண்களை "தீர்க்கசுமங்கலியாக வாழ்க!' என பெரியவர்கள் வாழ்த்து வதைப் பார்த்திருக்கிறோம். புராணங்களும் இதிகாசங்களும் வேதங்களும் சொல்லும் "தீர்க்க சுமங்கலி பவா' என்கிற அந்த வார்த்தைக்கு "நூறு வயதைக் கடந்தும் சுமங்கலியாக வாழவேண்டும்' என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்த "தீர்க்கசுமங்கலியாக வாழ்க' என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் ஐந்து மாங்கல்யம் பெறவேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக் கிறது.
✷ திருமணத்தில் ஒன்று.
✷ சஷ்டியப்தப் பூர்த்தியில் (60 வயது) ஒன்று.
✷ பீமரத சாந்தியில் (70 வயது) ஒன்று.
✷ சதாபிஷேகத்தில் (80 வயது) ஒன்று.
✷ கனகாபிஷேகத்தில் (96 வயது) ஒன்று.
திருமணம் என்பது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு ஊர்மக்கள் வாழ்த்த நிகழும் ஒரு வைபவம். அது பெரும்பாலானவர்களுக்கு வாய்த்துவிடக்கூடிய ஒன்று. ஆனால் சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை.
அவற்றை நடத்துவதற்கு பெரும்பாக்கியமும், பூர்வ புண்ணியமும், நீடித்த மாங்கல்ய வரமும் வேண்டும். அத்தகைய நீடித்த மாங்கல்ய வரத்தினைத் தரவல்லதொரு திருத்தலம்தான் திருமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் பூலோகநாதசுவாமி திருக்கோவில்.
சுவாமி: பூலோகநாதர்.
இறைவி: பூலோகநாயகி.
புராணப்பெயர்: ராஜராஜ திருமங்கலம்.
ஊர்: திருமங்கலம்.
விசேஷ மூர்த்தி: ஸ்ரீமங்களாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் (தம்பதி காட்சி),
அருந்ததி- வசிஷ்டர் (தம்பதி காட்சி).
தலவிருட்சம்: வில்வமரம், பன்னீர் மரம்.
தீர்த்தம்: மங்கள தீர்த்தம்.
சுமார் இரண் டாயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த இவ் வாலயம் காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகவும், விக்ரம சோழன் ஆற்றங்கரை யோரத்தில் வைப்புத்தலமாகவும், தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்திலும் இயங்கிவருகிறது. "திரு' என்றால் சுபிட்சமான சக்திகளைத் தருவது;
மங்களம் பொங்கும் பதினாறு பாக்கியங் களையும் இனிதே அளிப்பது. திரு என்பது ஸ்ரீ என்னும் மகாலட்சுமியையும் குறிக்கும். மகாலட்சுமியே மங்களலட்சுமியாக அருள் கின்ற மங்கலத்திற்கு "திருமங்கலம்' என்று பெயர்.
"சாகாது போகாது வாழ்வெனினும் வாழும்வரை
நோகாது நலியாது வாழ்ந்திருப்போம்- ஆகாது
எனும் ஒன்றில்லை அருள் திருமங்கலத்தான் பாதம்
தினம் பற்றித் தொழுவோர்க்கு இங்கு!'
"அருள் கொடுப்பான் வேண்டும்
பொருள் கொடுப்பான் தொழுவோர்தம்
இருள் கெடுப்பான் வேண்டும்
இன்பம் கொடுப்பான் அறியாமை
மருள் கெடுப்பான் வேண்டும்
ஞானம் கொடுப்பான் பிறவிப்
பொருள் கெடுப்பான் வேண்டின்
அருள் பூலோக நாயகி நாயகனே!'
தல வரலாறு
திருமணஞ்சேரியில் ஈசனுக்கும் உமைக்கும் திருமணம் நடந்தது. அதில் கலந்துகொள்ள தேவலோகமே திரண்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான். இப்படி பூலோக வாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காணமுடியாது வருந்து கின்றனரே என்ற எண்ணம் அம்மை- அப்பன் மனதில் தோன்றியது. உடனே சப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுவதுபோல் ஏழடி எடுத்து வைத்தனர். எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர்.
இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன்னெடுத்துக் கொடுத்த தாக ஐதீகம். இதைக் குறிக்கும்வகையில் இந்த ஊருக்கு மிக அருகில் "பொன்னூர்' எனும் சிற்றூர் இன்றும் உள்ளது.
எனவே திருமணம் கைகூடவும், திருமாங்கல்ய தோஷம் அகலவும் இங்கு வந்து தரிசிக்கலாம்.
ஈஸ்வர தம்பதியர் காட்சி கிடைத்தாலுமே, அந்த கணத்தை எந்நேரமும் நினைந்து நினைந்து அதிலேயே லயித்து, அந்த ஆனந் தத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க நமது மனம் பக்குவப்பட வேண்டும். நாளாக நாளாக வெவ்வேறு விஷயங்களில் மனம் செல்வதால் பயமும் கவலையும் நோயும் நம்மை ஆட்கொள்கின்றன. அவ்வாறு வாழ் வைக் கழிப்பதைவிட ஈசனையே சரணடைந்து நற்பேறு பெறுவதே சாலச்சிறந்தது. அந்த காரணத்திற்காகவே "சப்தபதி' கணத்தில் இத்தலத்திற்கு வந்தி ருந்த வசிஷ்டர்- அருந்ததி முதலானோர் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்யத் தலைப் பட்டனர். அதனை அவர்கள் பூர்த்திசெய்யும் "ஆஹுதி' வேளையில், அந்த வேள்வித் தீயிலிருந்து, யாகத்தின் பயனே இது எனும் வண்ணம், முன்னர் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த "காலசம்ஹார மூர்த்தி' கையில் பிரயோகத்திற்கு ஏந்திய சூலாயுதத்துடன் மார்க்கண்டேயன், எமன் சகிதம் காட்சி தந்தருளினார். வசிஷ்டர்- அருந்ததி முதலானோரும் இதர மக்கள் அனைவரும் இக்காட்சியில் மெய்சிலிர்த்து "மகேஸ்வரா... சம்போ சிவ சிவா...' என்று வீழ்ந்து வணங்கினர்.
சிறப்பம்சங்கள்
✷ ராஜராஜ திருமங்கலம் என்றும், விக்ரம சோழ திருமங்கலம் என்றும் அழைக்கப்பட்ட பெருமையுடையது.
✷ சிவராத்திரியன்று மூன்று உலகத்திலும் (பூமி, ஆகாயம், பாதாளம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் எல்லா சிவனையும் தரிசித்த பலனை வழங்கும் ஆலயம்.
✷ ஆயிரம் ஆண்டுகளுக்கொருமுறை தன்னை புதுப்பித்துக்கொள்ளும் ஆலயம்.
✷ வாமன நதி, மாங்கல்ய நதி, மங்கள நதி என்று தொன்மைப் பெயர்களுடன் கூடிய விக்ரம சோழ ஆற்றுத்தலமாக விளங்கும் புராதன மாங்கல்ய தலம். விளம்பி தமிழ் ஆண்டுக்கான விசேஷ வழிபாட்டுத்தலமும் இதுவாகும்.
✷ மங்கள மாங்கல்ய சக்தி, பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாக சித்தர்களால் போற்றப் படுகின்ற தலம்.
✷ பூலோகத்தின் சிறந்த வாஸ்துத் தலங்களுள் ஒன்று. திருமூலர் கூறும் நடராஜருடைய "பொன்மன்று' நடன சக்தித் தலங்களுள் ஒன்றாகப் போற்றப் படுகிறது.
✷ வாமன அவதார வைபவத்தில் திரிவிக்ரமப்பெருமாள் தன் பாதத்தை விண்ணுயர உயர்த்தியபோது, பிரபஞ்சத்தின்மேல் ஒரு துவாரம் உண்டாகி பிரம்மத்திரவம் ஊறிற்று.
இந்த துவாரத்தின் வழியே பிரபஞ்சத் திற்கு அப்பால் கடுவெளியில் நீண்டு சென்ற பெருமாளின் திருவடிக்கு பிரம்மா தன் கமண்டலத்தின் பிரம்ம கங்கையைக் கொண்டு அபிஷேகம் நிகழ்த்தினார். அது பெருமாளுடைய திருவடியில் விஷ்ணு கங்கையாக உற்பவித்தது. இவ்வாறு திரிவிக்ரமப்பெருமாளின் திருவடிகளில் விஷ்ணுபதி, விஷ்ணுகங்கை என்னும் கங்கா நதி உருவாகிய தினம்தான் விஷ்ணுபதி என்பதை நாமறிவோம்.
விஷ்ணு கங்கையை புரட்டாசி மகாளயபட்ச காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், 63 கோடி வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு மூர்த்திகளும் பூலோகத்திற்குக் கொண்டு வந்த தலங்களுள் திருமங்கலமும் ஒன்றாகும். இவ்வாறு பூமிக்கு வந்த விஷ்ணுகங்கை ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு பெயரைக்கொண்டது. விஷ்ணுகங்கை திருமங்கலத்தில் தோன்றியபோது விக்ரம நதியாகிப் பிறகு வாமன நதியாயிற்று. உத்தமபக்தனான விக்ரமசோழன் இந்நதியை சீரமைத்துத் தந்தமையால் விக்ரம நதியாக மீண்டும் புனரமைப்புப் பெற்றது.
✷ புரட்டாசி மகாளயபட்ச காலத்தில் பண்டைய யுகங்களில் மங்கள லோகத்தைச் சார்ந்த மங்களரிஷி, மாங்கல்ய ரிஷி, ஹேமரிஷி உள்ளிட்ட பதினைந்து ரிஷிகள் திருமங்கலம் பகுதியில் பிதுர்பூஜை, சிரார்த்தம், திவசம், படையல், தானதர்மம் போன்ற பதினைந்து பிதுர்சடங்குகளை நிகழ்த்தித் தந்து, சகல கோடி ஜீவன்களும் நற்கதி அடையும்படியாக திருமங்கலத்தின் மகத்துவத்தை மேம்படுத்தித் தந்தனர். எனவே திருமங்கலத்தில் ஆற்றும் தர்ப்பணாதிகள் முன்னும் பின்னு மாய்ப் பல தலைமுறையிரை உய்விக்க வல்லதாம்.
✷ திருமண வைபவத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்வது தாலிகட்டும் (மாங்கல்ய தாரணம்) சடங்காகும். தெய்வங்களின் திருமணங்கள் பலவும் பூலோகத்தில் நடைபெற்றுள்ளன. மதுரையில் மீனாட்சி, திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள், திருமங்கலக்குடியில் மங்களாம்பாள், திருவீழிமிழலையில் ஸ்ரீகாத்யாயினி, ஒப்பிலியப்பன் கோவிலில் மகாலட்சுமி, திருத்தணி, திருப்பரங்குன்றத்தில் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வத் திருமணங்கள் பூமியில் நிகழ்ந்தவை. இதற்கான மாங்கல்யத்தை விஸ்வகர்மா, மயன், தேவசிற்பிகள் பொன்னூரில் தங்கம் உருக்கி, திருமங்கலம் தலத்தில் திருமாங்கல்யம் ஆக்கப்பெற்றது. அது பார்வதி (மலைமகள்), திருமகள் (அலைமகள்), சரஸ்வதி (கலைமகள்), சாவித்ரீ (நிலைமகள்), ராதை (தலைமகள்) ஆகிய பஞ்சமா தேவியரால் திருமங்கலத்திலேயே பூஜிக்கப்பெற்ற பெருமை வாய்ந்த தலம்.
✷ 60, 70, 80 ஆண்டுக்கான சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், திருமணத் திற்கான மாங்கல்யங்களை திருமங்கலம் தலத்தில் வைத்துப் பூஜிப்பது புனிதமானது. இவ்வழிபாடு எத்தகைய மாங்கல்ய, மாரக, செவ்வாய் தோஷங்களையும் நீக்கி மங்கள வரமருளும் சிறப்புடையதாகும்.
✷ சிவராத்திரியன்று முதல்ஜாமப் பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சந்நிதியிலும், இரண்டாம்ஜாமப் பூஜையை அருகிலுள்ள மாங்குடியில் சிவலோகநாதர் தலத்திலும், மூன்றாம்ஜாமப் பூஜையை அதற்கு அருகிலுள்ள பொய்கைக்குடி நாகநாதர் ஆலயத்திலும், நான்காம்ஜாமப் பூஜையை மீண்டும் தொடங்கிய இடமான திருமங்கல பூலோகநாதர் சந்நிதியிலும் தரிசித்து நிறைவு செய்தால், மூவுலகிலுள்ள சிவலிங்கங்களையும் தரிசித்த பலன் கிட்டும்.
✷ சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை, ஈசன் பிரயோக காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளியிருக் கும் சந்நிதியில் வேள்விகளோடு நடத்தினால் "சாட்சாத்' அனுக்கிரகம் பெறலாம்.
✷ இத்தலத்து முருகன் கையில் ஜப மாலையுடன் மயில்மேல் அமர்ந்த "பிரம்மசாஸ்தா' நிலையில் காட்சி தருவதும், இத்தலத்து நந்தியெம்பெருமான் வலது முன்காலை தூக்கிவைத்து புறப்பாட்டுக்குத் தயார்நிலையில் உள்ளதும் மிகவும் சிறப்பு.
கோவில் அமைப்பு
பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் பரந்துவிரிந்த நெல்வயல்களின் நடுவே, விக்ரம சோழன் ஆற்றங்கரையோரத்தில் நடந்துசென்று மங்கள தீர்த்தத்தில் நீராடியபின், நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தை அடையலாம். கலைநுணுக்கங்களுடன்கூடிய சோழர்காலக் கல்தூண்கள் உள்ள மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மண்டபம், நெடிதுயர்ந்த மூலவிமானத்துடன் சுவாமி சந்நிதி தனிச்சுற்று பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
சுவாமி பூலோகநாதர் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். நடராஜரும் சிவகாமியும் தெற்கு நோக்கி அருள்கின்றனர்.
தனிப்பீடத்தில் மங்களாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் திருமணக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்கின்றனர். மகாமண்டபத்தில் சிலாரூபமாக காலசம்ஹார மூர்த்தியும், வசிஷ்டர்- அருந்ததி தம்பதியரும் காட்சி தருகின்றனர்.
திருமணம் காணவந்த முனிவர்கள், பிட்சாடனர், சூரியன், சந்திரன், பைரவர், நால்வருக்கும் சிலைகள் உள்ளன. சிவாகம விதிப்படி கோஷ்ட தெய்வங்களும், க்ஷேத்ர விநாயகர், வள்ளி, முருகன், தெய்வானை, கஜலட்சுமியும் அருள்கின்றனர்.
மங்கள சக்திகள் கொழிக்கும் மாங்கல்ய ஸ்திர சக்தி தலமாம்- மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்ணற்ற சித்தபுருஷர்கள், யோகியர்கள், ஞானியர்களும் திரண்டு மங்களகரமான பூஜைகளை நிகழ்த்திய தலமாம்- ஓலைச்சுவடி ரகசியத்தில் குறிப்பிட்டபடி விளம்பி வருடத்தில் வழிபட்டால் விசேஷப் பலன்களை விரைந்து அருள்கின்ற தலமாம்- குங்குமப் பொட்டின் மங்களம்- நீடித்த மாங்கல்ய வரமருளம் தலமாம் திருமங்கலம் பூலோகநாதர் உடனுறை பூலோக நாயகியின் பொற்பாதம் பணிந்து போற்றி வணங்குவோம். விளம்பிவருட விசேஷப் பலன்களை விரைந்து பெறுவோம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: மோகன் குருக்கள், அலைபேசி: 94430 25657.
ஸ்ரீபூலோகநாதர் திருக்கோவில்,
திருமங்கலம் அஞ்சல்.
மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்-609 811.
அமைவிடம்: கும்ப கோணத்திலிருந்து திருமணஞ்சேரி வழியாக 17 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை, பொன்னூர் வழியாக 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருமங்கலம். மினி பஸ் வசதி உண்டு. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
படங்கள்: போட்டோ கருணா
_______________
மார்கழி மகிமை
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் உத்தராயனம் பகல் எனவும், தட்சிணாயனம் இரவு எனவும் கூறுவர். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலைப் பொழுதாகும். மார்கழி மாதத்தை "மார்கசீர்ஷம்' என வடமொழியில் சொல்வர். "மார்கம்' என்றால் வழி, "சீர்ஷம்' என்றால் உயர்ந்த என பொருள். அதாவது உயர்ந்த வழிகளுள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடைவதற்கு இது உயர்ந்த மாதமாக இருக்கிறது. ஆகவே மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே தூய்மையான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு, இம்மாதத்தில் அதிகாலை நேரத்தில் இறைவழிபாடு செய்யப்படுகிறது.